l; font-variant-numeric: normal; font-variant-east-asian: normal; font-variant-position: normal; vertical-align: baseline;">பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ போல் எங்கெங்கு நோக்கினும் அழகு என்று அறிவித்தவர் பாரதிதாசன். முத்தாய்ப்பான வரி ‘பழமையினால் சாகாத இளையவள் காண்!’.
உறங்கும் உலகை உசுப்பி எழுப்பும் உதயசூரியனை இவ்வாறு வர்ணிக்கிறார்:
ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்!
உயர்மலைகள், சோலை, நதி இயற்கை எழில்கள் பார்
களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்
கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!
தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!
திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;
ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்
உயர்கின்றான்; உதயசூரி யன்வாழ்க நன்றே!
ஆக்கத்திற்குக் களி செய்தான்; அறிவுலகம் தழுவ இருட்கதவை உடைத்தெறிந்தான்; ஒளி உலகின் அதிபதி சூரியன்.
தென்றலின் இன்பம் மற்றும் விளையாட்டு பற்றிப் பாவேந்தரின் கவி நயம்:
இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப், பின்னர், வானிற்
பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்!
களிச்சிறு தும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்,
கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ!
« Previous Page 3 of 13 Next »
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362410