எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

images

பாரதியார் வரலாறு

சுப்பிரமணிய பாரதியார் டிசம்பர் 11, 1882ம் ஆண்டு எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமி அம்மாவிற்கு மகனாக பிறந்தார். ஐந்து வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிபாட தொடங்கினார். இவருக்கு பதினொரு வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ஆம் வகுப்பு வரை படித்தார். 1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி, பாரதிக்கு செல்லம்மாள் அவர்களோடு திருமணம் நடந்தேறியது. பதினாறு வயதில் தந்தையை இழந்த பாரதியார் வறுமையில் வாடினார். காசிக்குச் சென்று சிலகாலம் தங்கியிருந்த அவர், எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். 1912 ஆம் ஆண்டு கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘கண்ணன் பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற நூல்கள் பாரதியாரால் எழுதப் பெற்றன.

இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைபெற்று விளங்கினார். இம் மொழிகளைக் கற்று அறிந்த பின்னரே பாரதியார் “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” எனத் தெளிந்தார்

பாரதியார் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ போன்ற உணர்ச்சி மிகுந்து சுதந்திர தீயைப் பரப்பும் பாடல்களை எழுதினார். அதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி அவருடைய ‘இந்தியா’ பத்திரிக்கைக்குத் தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. பின்னர் இவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திர தாகத்தை மேலும் தூண்டும் வகையான “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்பது போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார். பாரதியார் பெண் விடுதலை மீதும் மிகுந்த நாட்டம் உடையவராக இருந்தார்.

பாரதியாரின் பாடல்கள் வீரமும், புதுப்பொருளும் தீஞ்சுவையும் பெற்ற புதுக்கவிதைகளாகத் திகழ்ந்தன. அவருக்குத் தேசியக் கவி, முண்டாசுக் கவிஞன், சக்திதாசன், பாரதியார், மகாகவி போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டன.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாகச் செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்ற பாரதியார், அங்கு யாரும் எதிர்பாரா விதமாகக் கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பவத்தால் நோய்வாய்ப்பட்ட பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இறந்தார்.

தான் வீழாது வெல்லப் பிறந்தவன் என்பதைக் கூறி காளியிடம் வரம் கேட்கும் பாடல்
தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
கொடுங் கூற்று - கொடிய எமன்; மாயும் – இறந்துபோகும்;

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து -- மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
மூளா தழிந்திடுதல் - இல்லது அழிந்திடல்; மதி – அறிவு;

தோளை வலியுடைய தாக்கி -- உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு
மாறா வுடலுறுதி தந்து -- சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து -- மத
வேளை வெல்லுமுறை கூறித் -- தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
வலி – உறுதி; கட்டு மாறா – கட்டுமஸ்தான; நண்ணி - பொருந்தி

எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக
நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல
பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
பண் - தமிழ் இசை வடிவம்(ராகம்);

கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப்
போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என
விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி்
சூழும் வீரமறி வாண்மை

கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி
தாயே உனக்கரிய துண்டோ? -- மதி
மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை
முற்றும் விட்டகல வேண்டும்;
குவை – குவியல்; கீர்த்தி – புகழ்; மதி – அறிவு

ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்
வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை
வாழி, நின்னதருள் வாழி.
ஓம் காளி வலிசாமுண்டீ
ஓங்காரத் தலைவி என்இராணி.
புலை – இழிந்த;