e-height: 1.2; margin-top: 0pt; margin-bottom: 0pt;">சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
உயிர்க்கு இம்மைக்குச் செல்வமும் மறுமைக்கு வீடும் தரவல்லது அறம்.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட உயர்வும் இல்லை; அதனை மயக்கத்தான் செய்யாமையின் மேற்பட்ட கேடும் இல்லையாம்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
தத்தமக்கு இயலும் திறத்தான், அறத்தை மன மொழி மெய் இடம் பொருள் ஏவலிடத்து ஒழியாது செய்க.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
ஒழுக்கமாகிய மன மாசின்றி நன்மை பயக்கும் அறம் செயல்வேண்டும். மனமாசுடன் மொழி மெய்களான் செய்யப்படுவன அறமாகா
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பிறர் ஆக்கத்தால் வரும் பொறாமையும், பொறி புலன்களால் வரும் ஆசையும், அவ்வாசை நிறைவேறாததால் வரும் கோபமும், கோபத்தின் வெளிப்பாடான கடுஞ்சொல்லும் ஆகிய நான்கும் இல்லாமல் செய்வதே அறமாவது.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
அறம் செய்வதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல், நிலையா உடம்பு நிலைத்திருக்கும் பொழுதே செய்க. செய்த அறம் உயிரின் துணையாய் நின்று நன்மை பயக்கும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
அறப்பயன் இத்தன்மத்து என்று யாம் எடுத்துரைக்க வேண்டுவதில்லை; பல்லக்கைத் தூக்குபவனோடு மற்று அதன்மேல் ஏறியிருக்கின்றவனுமே சான்று.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
ஒருவன் இடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அது அவன் பிறவிச் சுழற்சியினின்று விடுபடும் வழி காட்டும்.
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறம் செய்வதால் வருவதே இன்பமும் புகழும்; மறம் செய்யத் துன்பமே வரும்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
ஆராய்ந்து அறிந்து செய்யவேண்டியவை அறங்களே; செய்யத்தகாதது பழிச் செயல்கள்.
« Previous Page 5 of 6 Next »
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362413