எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

Kambar, the celebrated Tamil poet and author of the Ramayanam

கம்பர் வரலாறு

கவிச்சக்ரவர்த்தி கம்பர்(Kambar) மயிலாடுதுறை மாவட்டம் திருவழுந்தூர் (எ) தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் காலம் மற்றும் வரலாறு

பொதுவாக மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலமான கி.பி. 12ஆம் நூற்றாண்டே கம்பருடைய காலம் என்றும், சிலர் இவருடைய காலம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். கம்பருடைய தந்தை பெயர் ஆதித்தன் என்று கூறப்படுகிறது.

கம்பரை முதலில் ஆதரித்தவர் டையப்ப வள்ளல் என்பவர். பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

கம்பனின் மகன் கவிஞனான அம்பிகாபதி, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்ததாகவும், இதன் காரணமாகச் சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் மனமுடைந்த கம்பர் சோழ நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்று விட்டதாக அறியப்படுகிறது. அவர் தனது இறுதி நாட்களைச் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கழித்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.

கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் என்று தெரிகிறது.

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழியும், ‘கவிச்சக்ரவர்த்தி’ மற்றும் "கல்வியிற் பெரியோன் கம்பன்" என்ற பட்டங்களும் கம்பரின் கவித்திறமையைப் பறைசாற்றும்.

கம்பர் கவிதைகள் மற்றும் கம்பர் புத்தகங்கள் மற்றும் கம்பர் கதைகள்

கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் கற்றுத் தேர்ந்து சொல்வன்மை கொண்டவராக இருந்தர். அதையே பாரதி “கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனப் பாடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், கம்பர் ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும், உவமான நயமும், சந்த ஞானமும் பெற்று, ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ (Kambar Kavithaigal) போன்ற சிறந்த நூல்களைப் படைத்தார். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த காவியமாகக் கருதப்படுகிறது.

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. கம்பர் விருத்தம் பாடுவதில் மிகவும் வல்லவராகக் கருதப்பட்டார். அதையே பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன்” எனக் கூறியுள்ளார்.

தன்னுடைய தமிழ்ப் படைப்புகளால் தனக்கு அழிவு இல்லை என்று எண்ணிய கண்ணதாசன், கம்பனைப் பற்றி “காலமெனும் ஆழியிலும், காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு” எனக் கூறியுள்ளார்.

கம்பர் எழுதிய ராமாயணம்

(பாடல்கள் வரிகள் பொருளுடன்)

கோசலை நாடு

கம்ப இராமாயணத்தில் தசரதனின் மருத நிலத்து கோசலை நாடு எப்படி இருந்தது என்பதை பின்வருமாறு கூறுகின்றார்:
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ.

தண்டலை மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆட; தாமரை விளக்கம் தாங்க- தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க; கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல ஒலிக்க; குவளை கண் விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்க; தெண் திரை எழினி காட்ட- நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்ட; தேம் பிழி மகர யாழின்- தேனை ஒத்த மகர யாழ் இசை போல; வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாட; மருதம் வீற்றிருக்கும்-இவ்வாறு மருத நாயகி வீற்றிருக்கிறாள்.
கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
கூற்றம் இல்லை- கொடுமை இறப்புகள் நாட்டில் இல்லை; ஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; சீற்றம் இல்லை- சினம் நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால்- நாட்டு மக்களின் மனச் செம்மையால்; ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்- நல்ல அறச் செயல் செய்வதை தவிர வேறு செயல்கள் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர இழிவு அந்நாட்டில் இல்லை.
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

யாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை- எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் இல்லை.
இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.
இடம் கொள் சாயல் கண்டு- பெண் மயில்களின் சாயலைப் பார்த்து; இளைஞர் சிந்தை போல்- இளைஞர் மனத்தைப் போல; தடம் கொள் சோலைவாய்- விசாலமான சோலையினிடத்தே; மலர் பெய்தாழ் குழல்- மலரணிந்த நீண்ட கூந்தலையும்; வடம் கொள் பூண் முலை- முத்து மாலைகளை அணிந்த தனங்களையும் உடைய; மடந்தை மாரொடு- பெண்களுடனே; தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம்; தோகை மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்களே.

அயோத்தி நகரின் மாட்சி

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர்ப் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.
வயிர நல்கால் மிசை- வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே; மரகதத் துலாம்- மரகதத்தாலாகிய உத்தரத்தை; செயிர் அறப் போதிகை கிடத்தி- குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது கிடத்தி; சித்தரம் உயிர் பெறக் குயிற்றிய- ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்து; உம்பர் நாட்டவர் அயிர் உற
இமைப்பன - தேவகள் விமானமோ என ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்; அளவில் கோடியே- அளவற்ற கோடிக் கணக்கானவை.
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.

தணிமலர்த் திருமகள் - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி; தங்கும் மாளிகை- தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று- மிக்க ஒளி வீசி நின்று; இருள் துரப்பன-இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ- செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல-
மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே- அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் - சிற்றரசர்கள் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும்; அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் - அன்னம் போன்ற நடையையுடைய மாதர்கள் ஆடும் மண்டபங்களும்; உன்னரும் அருமறை ஓதும் மண்டபம் - அருமறை ஓதும் மண்டபங்களும்; பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் - கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்கள் இல்லை ; கல்வி முற்ற வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர்களும் அங்கு இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித் துறைகளில் வல்லவரும் இல்லாதவரும் இல்லை; எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே- எல்லோரும் எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை உடையவர்களும் இல்லை. இந்தப் பாடலின் சிறப்பு ஒன்று இல்லாமையான் வருவது அதன் எதிர்மறை என்பதின் உண்மை கூறல்.

அயோத்தி மன்னன்

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.

தாய் ஒக்கும் அன்பின் -அன்பு செலுத்துவதில் தாயை ஒப்பவனாவான்; தவம் ஒக்கும் நலம் பயப்பின் - நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவன்; சேய் ஒக்கும் - பெற்ற மகனை ஒத்திருப்பான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்- கடைசிக் காலத்தில் முன்னே நின்று இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்; நோய் ஒக்கும் என்னின் - குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவன்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்- நுணுக்கமான கலைத்துறைகளை ஆராயப்புகுந்தால் ; அறிவு ஒக்கும்- நுண் அறிவினை ஒத்திருப்பான்; எவர்க்கும் அன்னான் - எவர்க்குமான மன்னன்.

தசரதன் புத்திரன் வேண்டிச் செய்த வேள்வியில் பூதம் சோற்றுப் பிண்டத்துடன் எழுதல்:
ஆயிடை கனலின்நின்று அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது, ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று - அப்போது அந்த வேள்வித்
தீயிலிருந்து; அம்பொன் தட்டம் மீத் - அழகிய ஒரு பொன்
தட்டத்தின் மேலே; தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் - தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; ஏயென பூதம் ஒன்று - ஏயென்று
ஒரு பூதமானது; எழுந்தது ஏந்தியே- தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

கோசலை இராமனைப் பெறுதல்

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை.

ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து-பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு உணர்வு அரும்அவனை - அருமறைகளாலும் தெரிந்து கொள்ள இயலாத பரமனை; அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில்காட்டும் சோதியை - கண்மை போன்று கரிய மேகக் கொழுந்தின் அழகைக் ஒத்து நிற்கும் சோதி வடிவாய்த் திகழ்பவனை; திறம்கொள் கோசலை திருஉறப் பயந்தனள் - திறமையுடைய கோசலை மங்கலம் உற ஈந்தாள்.
'இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஒர் ஏழ் ஒடு ஏழ்,
நிறை நிதிச் சாலை தாழ் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க; என
அறை பறை!' என்றனன், அரசர் கோமகன்.

யாண்டும் ஓர் ஏழ் பார்இறை தவிர்ந்திடுக-ஏழாண்டுகள் நாட்டில் திறை செலுத்துவதைச் சிற்றரசர் தவிர்க்க; நிதி நிறைதரு சாலை -செல்வம் நிறைந்த பொருள் பாதுகாப்பறையை; தாள் நீக்கி -தாழ்ப்பாளை அகற்றித் திறந்து வைத்து; யாவையும் வறியவர் முறைகெட முகந்து கொள்க எனா - வரன் முறையில்லாது எல்லாச்
செல்வத்தையும். ஏழை எளியவர்கள் முகந்து கொள்ளுங்கள் என்று; அரசர் கோமகன் பறை அறை என்றனன் -மன்னர் மன்னனான தயரதன் பறை அறைந்து தெரிவியுங்கள் என்றான்.
பிள்ளைகள் பிறந்த மகிழ்ச்சியால் ஏழாண்டுகள் திறை தவிர்க
எனவும். யாவையும் முறைகெட முகந்து கொள்க எனவும் பறை
அறையுமாறு மன்னர் மன்னன் கட்டளையிட்டான்.
'படை ஒழிந்திடுக; தம் பதிகளே இனி
விடைபெறுகுக முடி வேந்தர்; வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழா ஒடு பொலிக எங்கணும்.'

முடிவேந்தர் படை ஒழிந்திடுக- நம்மால் சிறை வைக்கப்பட்ட அரசர்கள் எல்லோரும் தம்மைச் சிறைகாக்கும் படைகளிலிருந்து நீங்கட்டும்; இனி தம் பதிகளே விடைபெறுக - இனிமேல் தங்கள் நகரங்களுக்குச் செல்ல விடுதலை பெறட்டும்; வேதியர் நடைஉறு நியமமும் நவை இன்று ஆகுக - வேதம் ஓதுதலில் வல்லவரான வேதியர்கள் தமது ஒழுக்க நியமங்களில் குற்றம் நீங்க நடைபெறட்டும்; புடைகெழுவிழாவொடு பொலிக எங்கணும் - (கோயில்கள்) எங்கும் விழாக் கோலம் பொலியட்டும்.
'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும்;
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தூபமும் வழங்குக!' என்றனன்.

ஆலையம் புதுக்குக - கடவுளர் கோவில்களை எல்லாம் புதுப்பியுங்கள்; அந்தணாளர் தம் சாலையும் சதுக்கமும் சமைக்க - அறவோர் சாலைகளையும் நாற்சந்திகளையும் அமையுங்கள்; காலையும் சந்தியும் மாலையும் - அந்தி நேரம். காலை. மாலை ஆகிய வேளைகளில்; கடவுளர்க்கு அணிமாலையும் தீபமும் வழங்குக என்றனன் - கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கு அழகிய மலர் மாலைகளும் தீபங்களும் வழங்குங்கள் என்றான்.
கரா மலையத் தளர் கை கரி, எய்த்து ஏ,
'அரா அணையில் துயில்வோய்! 'என அ நாள்,
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கு ஏ
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன், அன்றே

கரா மலைய-ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர் கைக்கரி - அதனால் சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான கஜேந்திரன்; அரா அணையில் துயில்வோய் என - பாம்பணையில் துயில்பவனே என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள் -அந்த நாளிலே விரைந்து அந்த முதலையை அழித்து யானையைக்
காத்தருளிய; மெய்ப்பொருளுக்கு - உண்மைப் பொருளான அப்பரமனுக்கு; ‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனர் - இராமன் என்னும் பெயரை (வசிட்டன்) சூட்டினான்.
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது என, அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே - நீலோற்பல மலரையும் இடையே ஒளிரும் தாமரைகளும் எனுமாறு; ஓவிய எழில் உடை ஒருவனை - ஓவியம் போன்ற அழகுடைய ஒப்பற்ற ஒருவனாகிய ராமனை; அலதோர் ஆவியும் உடலுமு் இலதென - அல்லது. வேறு உயிரும். உடலும் தனக்கு இல்லை எனும்படி நினைத்து; உலகுடைய வேந்தர்தம் வேந்தன் - உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆளும் மன்னர் மன்னனான தயரதன்; அருளின் மேவினன் - அருள் உடையவனாய் வாழ்ந்திருந்தான்.
சவுளமொடு உபநயனமும் முறை தருகுற்று,
இ அளவது என ஒரு கரை பிறிது இல வாய்,
உவள் அரு மறையின் ஒடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.

சவுள மொடு உப நயம் - சவுளம். உபநயனம் முதலாகிய சடங்குகளை; விதிமுறை தருகுற்று - விதிப்படி செய்து; இ அளவது என -இந்த அளவுடையது எனக் கூறும்படியான; ஒருகரை பிறிது இலவா-ஒரு எல்லை வேறு எனச் சொல்ல இயலாதபடி; உவள் அருமறையின் ஒடு - தூய்மையான வேதங்களுடன்; ஒழிவு அறு கலையும்- நீங்காத கலைகள் பலவற்றையும்; தவன் மதிபுனை அரன்நிகர் முனிதரவே - சந்திரனைத் தலையில் அணிந்துள்ள சிவபெருமானுக்கு ஒப்பான வசிட்ட முனிவன் கற்றுத்தர.

விசுவாமித்திர முனிவன் வருகை

இன் தளிர்க் கற்பகம் நறும் தேன் இடை துளிக்கும்
நிழல் இருக்கை இழந்து போந்து
நின் தளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கிக்,
குறை இரந்து நிற்ப, நோக்கிக்
குன்று அளிக்கும் குலம் மணித் தோள் சம்பரனைக்
குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு,
அன்று அளித்த, அரசு அன்று ஓ புரந்தரன்
இன்று ஆள்கின்றது; அரச! என்றான்.

அரச புரந்தரன் இன்று ஆள்கின்றது-தயரத மன்னனே! இந்திரன் இன்று ஆண்டு கொண்டிருக்கும் அமர ருலக ஆட்சி; இன்தளிர்க் கற்பக நறும்தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை - இனிய தளிர்களை உடைய கற்பக மரத்தின் பூக்கள் தேனை இடையிடையே துளிக்கின்ற நிழலை உடைய ஆசனத்தை; இழந்து போந்து - இழந்து விட்டு உன்னிடம் வந்து; நின்று அளிக்கும் தனிக்குடையின் நிழல் ஒதுங்கி - உலகனைத்தையும் நின்று காக்கின்ற உனது ஒப்பற்ற வெண்குடை நிழலில் ஒதுங்கி நின்று; குறை இரந்து நிற்ப நோக்கி - தனது குறைகளைச் சொல்லி யாசித்து நிற்க. நீ அதைப் பார்த்தபின்; குன்று அளிக்கும் குலமணித் தோள் சம்பரனை - மணிகளால் அலங்கரிக்கப்பட்ட குன்று போன்ற தோள்கயைுடைய சம்பரன் என்ற அசுரனை குலத்தோடும் தொலைத்து - அவனது கூட்டத்தாரோடும் அழித்து; நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ - நீ உனதாக ஆக்கிக் கொண்டு. அன்று இந்திரனுக்குத் தந்த அரசை அல்லவா; புரந்தரன் இன்று ஆன்கின்றது என்றான் - அவ்விந்திரன் இன்றளவும் தன்குரியதாக ஆட்சி செய்து வருவது என்று முனிவன் கூறினான்.
"தரு வனத்துள் யான் இயற்றும் தவ வேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி
என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி” என உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.

தருவனத்துள் யான் இயற்றும் - மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற; தவவேள்விக்கு இடையூறா - பெரிய யாகத்துக்கு இடையூறாக; தவம் செய்வோர்கள் வெருவர - தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக; சென்று அடைகாம வெகுளி என - அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம். வெகுளி மயக்கங்களைப் போல; நிருதர் இடைவிலக்காவண்ணம் - அரக்கர்கள் கெடுக்காதபடி; செருமுகத்துக் காத்தி என - அவர்களோடு செய்யும் போர் முகத்திலே காத்தருள் வாயாக என; நின் சிறுவர் நால்வரினும் - உன்புத்திரர்கள் நால்வர்களுள்; கரிய செம்மல் ஒருவனை - கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை; தந்திடுதி என - அளித்திடுவாயாக என்று; உயிர் இரக்கும் கொடும் கூற்றின் - உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச் சொன்னான் - மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.
எண் இலா அருந்தவத்தோன் இயம்பிய சொல்,
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசல் ஆடக்
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடும் துயரம் கால வேலான்.

எண்இலா அருந்தவத்தோன் - எண்ண முடியாத அரிய தவத்தைச் செய்த விசுவாமித்திரர்; இயம்பிய சொல் - சொன்ன இந்தச் சொற்களானது; மருமத்தின் எறிவேல் பாய்ந்து-மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த: புண்ணில் ஆம் பெரும் புழையில் - புண்ணாகிய புழையிலே; கனல் நுழைந்தால் என - கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல; செவியில் புகுதலோடும் - தனது காதுகளில் புகுந்த போது; உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த - உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம் (உயிரை) வெளியே தள்ள; ஆர் உயிர் நின்று ஊசல் ஆட - தயரதனது அவ்வரிய உயிர் (உள்ளே போகவும். வெளியே வரவுமாக) ஊசல்போல் ஆட; கண்இலான் பெற்று இழந்தான் என - கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படி; காலவேலான் கடுந்துயரம் உழந்தான் - பகைவனின் உயிருக்கு இறுதிக்காலம் காட்டும் வேலையுடைய தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினாலே மிகு வருந்தினான்.
வந்த நம்பியைத் தம்பி தன்னோடு
முந்தை நால் மறை முனிக்குக் காட்டி,'நல்
தந்தை நீ,தனித் தாயும் நீ, இவர்க்கு
எந்தை! தந்தனன்; இயைந்த செய்க' என்றான்.

வந்த நம்பியை - அவ்வாறு அருகு வந்து சேர்ந்த நம்பியாகிய இராமனை; தம்பி தன்னொடும் - ராமனை விட்டு நீங்காத தம்பியான இலக்குவனோடும்; முந்தைய நான்மறை முனிக்குக் காட்டி - பழைய வேதங்களை அறிந்தநல் முனிவனாகிய விசுவாமித்திரனுக்குக் காட்டி; நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு -இந்த குமாரர்களுக்கு இனித் தாயும் தந்தையும் நீங்களே தாம்; எந்தை தந்தனன்-எந்தையே! இவர்களைத் தங்களிடம் கொடுத்தேன்; இயைந்த செய்க என்றான் - இவர்களைக் கொண்டு இயைந்தபடி காரியங்களைச் செய்வீராக
என்றான்.
தாழும் மா மழை தழுவும் நெற்றியால்
சூழி யானை போல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சிப் பச்சை மா
ஏழும் ஏறப் போய் ஆறும் ஏறினார்.

தாழும் மா மழை - படிந்திருக்கின்ற பெரு மேகங்களை; தழுவும் நெற்றியால் - தழுவியிருக்கும் தாழ்வரைகளால்; சூழி யானை போல் - முகபடாம் அணிந்துள்ள யானையைப் போல; தோன்றும் மால்வரை - காணப்படும் பெரிய மலையினது; பாழிமா முகட்டு உச்சி - பெருமை பொருந்திய உயர்ந்த சிகரத்தின் உச்சியில்; பச்சைமா ஏழும்
ஏற - சூரியனது தேரில்பூட்டப்பட்ட பச்சைநிறக் குதிரைகள் ஏழும் ஏறும்படியான உச்சிக் காலத்தில்; ஆறும் ஏறினார் - அந்தச் சரயு நதியைக் கடந்து சென்றனர்.

காமனாச்சிரமத்தின் பெருமை

பற்று அவா வேர் ஒடு உம் பகை அறப் பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனில்
சொற்ற ஆம் அளவது ஓ மற்று இதன் தூய்மையே.

பற்று அவா வேரொடும் பசை அற- உலகப் பொருள்களில் பற்றியுள்ள ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற - அவ்வாசையின் பயனாய் வரும் பிறவி நோய் சென்று முடியவும்; வால் உணர்வு மேல் - மெய்யுணர்வு பெற்ற; முடுகினார் அறிவு - விரைந்து சென்று அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று உற்றவானவன் - சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே; இருந்து யோகு செய்தனன் எனில் - இங்கிருந்து யோகத்தைச் செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ- இதன் தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது.
இச்சோலை யாதெனக் கேட்ட ராமனுக்கு. சிவபிரான் யோகுசெய்த இடமென முனிவன் கூறி. அதன் தூய்மையைச் சிறப்பித்துக் கூற. பின் மூவரும் தொடர்ந்து சென்று ஒரு பாலையை எய்தினர்

பாலைநிலம்

பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே
சூரும் ஓடாது கூடாது அரோ சூரியன்
தேரும் ஓடாது மா மாகம் மீது ஏறி நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது அரோ.

பாரும் ஓடாது - நிலமகளும் (வெப்பம் பொறுக்காது) அந்த நிலத்தை விட்டு ஓடிப் போகநினைத்தாலும் இயலாது; நீடாது எனும்பாலதே - ஏனெனில் இடத்தை விட்டுப் பெயராத தன்மை உடையவளாதலாலே; சூரும் ஓடாது - பாலை நிலத்துகுரிய காளியும் நீங்காள்; கூடாது அரோ - நிலத்தெய்வம் நிலத்தை விட்டு நீங்கமுடியாது; மா மாகம் மீ - அந்நிலத்துக்கு மேலே பெரிய வானத்திலே; சூரியன் தேரும் ஓடாது - பாலையின் வெப்பம் தாங்காது குதிரைகள் சோர்ந்து போவதால் பரிதியின் தேரும் ஓடாது; தேரின் நேர்காரும் ஓடாது- ஆராயின். அந்நிலத்துக்கு நேராக மேகமும் ஓடாது; நீள் காலும் ஓடாது - வீசுகின்ற காற்றும் அங்குச் செல்லாது.
தா வரும் இரு வினை செற்றுத் தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன் விலைப்
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே.

தா வரும் இருவினை செற்று - தாவி வருகின்ற நல்வினை. தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து; தள்ள அரும் மூவகைப் பகை அரண்கடந்து - தள்ளுதற்கு அரிய மூன்று வகைப்பட்ட உயிர்ப் பகை ஆகிய காவலையும் கடந்து; முத்தியில் போவது புரிபவர்மனமும் - வீடு பேறடைவதற்குரிய காரியங்களையே செய்யும் ஞானிகள் மனமும்; பொன் விலைப் பாவையர் மனமும் - பொன்னுக்குத் தமது மேனியை விலைகூறும் விலை மாதர்களின் மனமும்; போல் பசையும் அற்றதே - (எவ்வாறு பசையற்றிருக்குமோ அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது.

தாடகை

மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்.

உருத்து மண் எடுப்பினும் - கோபித்து. இந்தப் பூமியை எடுப்பதாயினும்; கடலை வாரினும் - கடல்நீரையெல்லாம் அள்ளுவதானாலும்; உருத்து விண் இடிப்பினும் - கோபம்கொண்டு மேகத்தை இடிப்பதானாலும்; வேண்டின் செய்கிற்பாள் - அவள் விரும்பினால் செய்ய வல்லவளாவாள்; எண் உரு தெரி வரும் -எண்ணத்தினால் செய்யப்படும் நுண்மையான பாவமும் (உடலால்) செய்யப்படும் பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி - ஒரு சேரச் சேர்ந்து; ஓர்பெண் உருக்கொண்டு என - ஒரு பெண்வடிவைக் கொண்டது என்னும்படி; திரியும் பெற்றியார்-இங்குத் திரிகின்ற தன்மை உடையவள்.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே.

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்- நிறைமொழி மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை; கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்- கரிய நிறமும். அழகும் உடைய இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விடவே; வயிரக் குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது - (அந்த அம்பு) வைரம் பாய்ந்த கல்போன்ற அத்தாடகையின் நெஞ்சில் தங்கியிராமல்; அப்புறம் கழன்று - (நெஞ்சில் பாய்ந்து) பின் முதுகின் புறமாகக் கழன்று; கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என - கல்வி அறிவில்லாத புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல; போயிற்று - ஓடிப்போய்விட்டது.

சடையப்ப வள்ளல்

தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைத்தார் கம்பர். ராமர் பட்டாபிஷேகத்தைக் கூறும் பாடலில்
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற,
விரைசெறி குழலி ஓங்க,
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி,
வசிட்டனே புனைந்தான் மௌலி.

என்பார்.
அரியணை – சிங்காதனம்; இருவரும் கவரி பற்ற - இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை வீச; விரைசெறி குழலி - மணக்கும் கூந்தலை உடைய; மரபுளோர் – முன்னோர்; வசிட்டனே புனைந்தான் மௌலி - வசிட்ட முனிவர் மகுடம் சூடினார்.

கம்பராமாயணம் வாங்க

https://shorturl.at/tr0Fu

https://shorturl.at/LCTXO

https://archive.org/details/acc.-no.-7203-kambaramayanam-1984

https://archive.org/details/kmm-0322-sri-kambaramayanam-balakandam-1967/page/6/mode/2up

https://shorturl.at/ecdm3

Read more: ஒளவையார் வரலாறு